இந்தியாவின் அழுத்தங்களுக்குப் பணிந்தது சிறிலங்கா

சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்படை கைது செய்வதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும், இந்த விடயத்தில் சிறிலங்கா மீது இந்தியா கடுமையான அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு புல்மோட்டைக்கு வடக்கே, ஆறு விசைப்படகுகளில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 43 தமிழக மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவர்களை உடனடியாக விடுதலை செய்யும் படியும் இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.

இதனை அடுத்து 43 மீனவர்களும் திருகோணமலை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது திருகோணமலை வைஎம்சிஏ மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களை இந்திய கடலோரக் காவல்படையினர் வந்து அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்கும் நிகழ்வுகள் இதற்கு முன்னர் இந்திய – சிறிலங்கா கடல் எல்லையிலேயே நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இம்முறை மீனவர்களை அழைத்துச் செல்வதற்கு இந்திய கடலோரக் காவல்படை சிறிலங்கா கடற்பரப்புக்கு வரவுள்ளதாகவும் கொழும்பு நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் 8 படகுகளும் 56 மீனவர்களும் இந்தியாவின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது மீனவர்களின் ஊடுருவலை அங்கீகரிக்கக் கோரும் அழுத்தமாக  அமைந்துள்ளதாகவும், இந்தியாவின் தலையீட்டினால் இந்த விடயத்தில்  உள்நாட்டுச் சட்டத்தை சிறிலங்காவினால் நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.