கிழக்கு பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தையடுத்து பேராசிரியர் நியமனம் ரத்து!

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்கவின் நியமனத்தை ரத்துச் செய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மாணவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்பேசும் ஒருவரே உபவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் எனக்கோரி நேற்றைய தினம் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவுடன் தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாக தமிழர் ஒருவரை உபவேந்தராக நியமிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருந்த அசாதராண சூழ்நிலை காரணமாக அப்போதைய உபவேந்தராக இருந்த கலாநிதி என்.பத்மநாதன் பதவி விலகியிருந்தார். அதன் காரணமாக பதில் உபவேந்தராக கே.பி.பிரேம்குமார் செயற்பட்டு வருகிறார்.

புதிய உபவேந்தர் ஒருவரை நியமனம் செய்வதற்காக பேராசியர்கள் மூவருடைய பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவையில் கடமையாற்றிய பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்க உயர்கல்வி அமைச்சரால் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்ததையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், தமிழ் அரசியல்வாதிகளின் தலையீட்டால் புதிய உபவேந்தரின் நியமனத்தை ரத்துச் செய்வதற்கும், ஜனாதிபதிக்கு அனுப்பட்ட மூவரில் ஒருவரின் பெயரை சிபாரிசு செய்வதெனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது

 

Comments are closed.