சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழ் தேசியம்! – செண்பகத்தார்

தமிழ் தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இருபதாம் நூற்றாண்டு பிற்பகுதி இருபதத்தியொராம் நூற்றாண்டு முற்பகுதி நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாகும். ஜந்து கண்ட நாடுகளில் கடல் கடந்து வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழுணர்வை ஊட்டும் நிகழ்வுகள் இந்தக் காலப்பகுதியில் நடந்துள்ளன.

தம்மை ஒரு தாய் பிள்ளைகளாகவும் தமிழன் என்ற தலைப்பிட்ட பெருங் குடும்பத்தின் உறுப்பினராகவும் உலகத் தமிழர்கள் எண்ணத் தொடங்கியதை மிகப் பெரியதொரு கருத்தியல் தோற்றமாக மதிப்பிட முடியும். சென்ற நாடுகளில் கரைந்து போன தமிழினம் தனது தனித்துவ அடையாளங்களைப் பேணத் தலைப்பட்டதையும் தேசிய உணர்வின் அங்கமாகப் பார்க்க வேண்டும்.

சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியம் கனடா, ஜக்கிய இராச்சியம், பிரான்சு, நோர்வே போன்ற நாடுகளில் நடக்கும் பொது மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் வெளிப்படுகிறது.

வரலாற்றில் முதன் முறையாக ஒரு தமிழச்சி கனடா பராளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய போது உலகத் தமிழர்கள் மெய்சிலிர்த்து நின்றனர். தமிழ் நாடு, தமிழீழம், மலேசியா, என்பன ராதிகா சிற்பேசன் அவர்களின் ஆற்றலைப் பாராட்டியுள்ளன.

நோர்வே, பிரான்சு, ஜக்கிய இராச்சியத்தின் இலன்டன் மாநகர் ஆகியவற்றில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்கள் தம்மைத் தமிழர்களாக இனங்காட்டியது தான் கவனிக்கப்பட வேண்டிய சிறப்பம்சம்.

சர்வதேசத் தமிழர் ஒற்றுமை இயக்கம் தமிழ் நாட்டை மையமாகக் கொண்டது. ஏழு கோடி தமிழர் வாழும் தமிழகம் உலகத் தமிழினத்தின் தலை நாடு என்பதில் ஜயமில்லை. தமிழுணர்வு தலைதூக்கி தேர்தல் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இங்கு இடம்பெறுகிறது.

தனியொரு தமிழனுக்கு இன்னல் விளைந்தால் அதைத் தடுக்கும் ஒன்றிணைந்த சக்தியாக உலகத் தமிழினம் வலுப்பெற வேண்டும். இதை எப்போதோ செய்திருக்க வேண்டும். தவறிவிட்டோம். இனிமேலும் முள்ளிவாய்க்கால் போன்ற படுகொலைகள் நடக்காமல் தடுக்க உலகத் தமிழினத்தால் முடியும்.

படுகொலைக்கு உட்பட்ட இலங்கைத் தமிழர்கள் வீழ்ந்துவிடவில்லை. கொழும்பு மாநகராட்சி எல்லைக்குள் இரண்டு இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் கடந்த உள்ளாட்சி தேர்தலில் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது ஆதரவைப் பெற்ற வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து தமிழீழத்திற்கு எதிராக நடத்திய போரைச் சரண்புகாது எதிர் கொண்ட மாண்பைப் பொது மானுடத்தின் ஒட்டு மொத்த நாகரிக வளர்ச்சிக்குத் ஈழத் தமிழர்கள் செய்த பங்களிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சமூகங்களின் குணாம்சங்களையும் இயல்புகளையும் ஆய்வு செய்வோர் தமிழினத்தின் வீரப் பாரம்பரியத்தின் மறுபிறப்பை வியப்புடன் நோக்குகின்றனர் காலச் சுழற்சியில் தமிழ் வீரம் மறைந்து விட்டதாகக் கருதியோர் தமது கணிப்பை விடுதலைப் புலிகள் நடத்திய விடுதலைப் போருக்குப் பிறகு மாற்றியுள்ளனர்.

புலிகள் மூட்டிய வீர நெருப்பும் பரவும் தீயினை ஒத்த தமிழுணர்வும் உலகத் தமிழினத்தை ஒன்றிணைக்க உதவுகின்றன. இது மாற்றங்களையும் துணிச்சலான நகர்வுகளையும் முன்னெடுக்க உதவும் சக்தி. தாம் வாழும் நாடுகளில் உலகத் தமிழர்கள் எழுச்சி பெற்று முழு மூச்சுடன் உரிமைப் போர் நடத்துகிறார்கள் என்றால் அதற்குப் புலிகள் வரலாறு தூண்டு கோலாக இருக்கிறது.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களால் முதலாவது பொங்கு தமிழ் நிகழ்ச்சி 2001 ஜனவரி 17ம் நாள் நடத்தப்பட்டது. பொங்கு தமிழ் என்ற சொற்றொடரை உருவாக்கியவர் பரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள். இன்று பொங்கு தமிழ் நிகழ்ச்சி சர்வதேச மட்டத்தில் தமிழர்களின் மாபெரும் எதிர்ப்பு இயக்கமாக இடம்பெறுகிறது.

அதே போல் மாவீரர் நிகழ்வுகளும் நவம்பர் 27ம் நாட்களில் சர்வதேச மட்டத்தில் நடத்தப்படுகின்றன. துயிலும் இல்லங்கள் தமிழீழத்தில் அழிக்கப்பட்டாலும் மாற்று அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு வழிபாடுகள் நடக்கின்றன. தஞ்சையில் முள்ளிவாய்க்காலில் இறந்தோருக்கான நினைவாலயம் எழுப்பப்படுகிறது.

சென்ற வருட (2011) மாவீரர் நிகழ்வுகளில் மிகமுக்கியமானது காஞ்சிபுரத்தில் நடந்த செங்கொடி தொடர்பான நிகழ்ச்சிகளாகும். தமிழ் நாடு காஞ்சியைச் சேர்ந்த பெண் மாவீரர் செங்கொடி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலை கோரித் தனக்குத் தானே தீ மூட்டி வீரச்சாவடைந்தார்.

அவர் சார்ந்த மக்கள் கலைக் குழு அவருடைய சிலையைக் காஞ்யில் எழுப்பியது. அவர் நினைவாக ஒரு மணிமண்டபமும் எழுப்பப்பட்டது. மாவீரர் நாள் நிகழ்வுகளின் அங்கமாக தமிழ் நாடு தூத்துக்குடி மாவீரன் முத்துகுமார், தமிழீழத்து திலீபன் ஆகியோர் சிலைகள் பக்கம் பக்கமாக காஞ்சியில் நாட்டப்பட்டன.

இந்த நிகழ்வுகளின் இன்னோர் முக்கிய அம்சமாக தமிழர்களின் பாரம்பரியத் தோல் வாத்தியமான பறை கொட்டப்பட்டது. பாரம்பரியக் கலைகளுக்கு விடுதலைப் புலிகள் ஊக்குவிப்புக்களை வழங்குகிறார்கள். செங்கொடி சிறந்த பறை மேளக் கலைஞர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ் நாடு வடமேற்குக் கிராமமான புலியூர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மாவீரர் நிகழ்வுகளைக் கொண்டாடினார்கள். கொளத்தூருக்கு அருகாமையிலுள்ள இந்தக் கிராமத்தில் புலிகளுடைய பயிற்சி முகாம் இருந்தது. அதன் காரணமாக புலிய+ர் என்ற பெயர் அதற்கு ஏற்பட்டது. லெப் கேணல் பொன்னம்மான் நினைவு மண்டபம் புலியூர் மக்களால் அமைக்கப்பட்டுள்ளது.

2010 யூலை கடைசி நாளன்று தமிழர் களம் நடத்திய மண்ணுரிமை மாநாடு நெல்லையை உலுக்கியது. ஈழ விடுதலை ஆதரவு முழக்கங்களும், பிரபாகரன் வாழ்க ஒலிகளும் உணர்வின் உச்சத்தில் ஆர்ப்பரித்தன. இனவிடுதலைக்காக தூத்துக்குடி, புதியநல்லூர் குமரேசன் முத்துக்குமாரன் உயிர்நீத்தார்.

இவரைத் தொடர்ந்து 19 மாவீரர்கள் உயிர் நீத்தனர். முத்துக்குமாரன் உயிர்நீத்த ஜனவரி 29ம் நாளை இனப்போர் ஈகையாளர் நாளாகக் கொண்டாடுவோம் என்று நெல்லை மாநாட்டுத் தலைவர் அரிமாவளவன் அறிவித்தார்.

தமிழ்த் தேசியம் நீறுபூத்த நெருப்பாகத் தமிழ் நாட்டில் இருப்பதை மேற்கூறியவை உறுதி செய்கின்றன.

மொழி இன்றில் இனம் இல்லை, இனம் இன்றி மொழி இல்லை. இனமும் மொழியும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. இனம் வாழ மொழியைக் காத்து வரவேண்டியது மிகவும் அவசியம். தென்னாபிரிக்க வாழ் ஏழு இலட்சம் தமிழர்களின் இளைய தலைமுறையினர் தமிழ்க் கல்வியில் நாட்டம் குறைந்தும் ஆங்கிலத்தில் நாட்டம் கூடியும் காணப்படுகின்றனர்.

ஆபிரிக்கக் கண்டத்தின் மடகஸ்கார் தீவின் கிழக்குக் கரையில் இருந்து இந்து மாகடலில் 900 கி.மீ  தொலைவிலுள்ள மொறீஷியஸ் (Mauritius)தீவில் தம்மைத் தமிழர் என்று கூறுவோர் வாழ்கின்றனர். அந்த நாட்டு நாணயத் தாழில் தமிழ் காணப்படுகிறது. ஆனால் தமிழ் பேசுவோர் மாத்திரம் அரிது.

மேற்கூறிய மடஸ்கார் தீவின் வட கிழக்கே இந்து மாகடலில் 1500 கி.மீ தொலைவில் 115 குறுந்தீவுகளைக் கொண்ட செய்ஷெலஸ் (Seychelles) தீவுகளில் 3,500 தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழ் நன்கு செழித் தோங்கிக் காணப்படுகிறது இந்து மத வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

கடந்த 225 ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழ் மொழி வளர்ச்சி செய்ஷெலஸ் தீவுகளில் காணப்படுகிறது. தமிழ்மொழி, இந்துமத எழுச்சியும் மறுமலர்ச்சியும் இந்த தீவுவாழ் தமிழர்களை அடையாளப் படுத்துகின்றன. வர்த்தகத் துறையில் இவர்கள் உயாந்து விளங்குகின்றனர்.

சர்வதேச மட்டத்தில் எழுச்சி பெற்ற தமிழ்த் தேசியம் மொழி வளர்ச்சியில் தீவிர கவனஞ் செலுத்த வேண்டும். அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தமிழ்ப் பள்ளிகள் இருப்பது குறிப்பிடத் தக்கது. ஜரோப்பிய நாடுகளிலும் தமிழ்க் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

உலகத் தமிழினத்திற்கு அரசியல், பொருளாதார முன்னெடுப்புகளுக்காக சக்திவாய்ந்த பிரதிநிதித்துவ அமைப்பு தேவைப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE) உலகத் தமிழர் அமைப்பு (GTF) என்ற இரு முயற்சிகள் குருத்தில் கருகிவிட்டன.

இவற்றின் செயலிழப்பிற்கான காரணத்தைத் தேடவேண்டியதில்லை. நாடு கடந்த தமிழீழ அரசு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ஜீரிஎப் எனப்படும் உலகத் தமிழர் அமைப்பு புது டில்லி அரசின் வழிகாட்டலை ஏற்றுக் கொண்டு தனது தனித்துவத்தை இழந்து விட்டது.

பொருளாதார ஊக்குவிப்பு, தமிழ்மொழி வளர்ச்சி, தமிழர்களின் பாதுகாப்பு ஆகிய மூன்று துறைகளிலும் கவனம் செலுத்தும் உளகளாவிய தமிழ் தேசிய அமைப்பு தேவைப்படுகிறது. தேசிய எழுச்சியைத் திட்டமிட்டு மேற்கூறிய இலக்குகளை நோக்கிச் செலுத்தும் போது சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியம் முழு வடிவம் பெற்று விடும்.

 

 

 

 

Comments are closed.