அவுஸ்திரேலிய தலைநகர் கேன்பராவின் ஓட்டலில் பிரதமர் ஜூலியா கிலார்ட்டை பழங்குடியினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவுஸ்திரேலியாவில் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தலைநகர் கேன்பராவின்
ஒரு ஓட்டலில் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. அதில் பிரதமர் கிலார்ட், எதிர்க்கட்சி தலைவர் டோனி அபாட் இருவரும் பங்கேற்றனர். அவர்கள் இருந்த அறையை திடீரென 200க்கும் மேற்பட்ட பழங்குடியின போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்தனர்.
அவர்கள் போராட்டம் குறித்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாததால் ஓட்டலில் குறைந்த அளவு காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். கிலார்ட், அபாட் ஆகியோரை எதிர்த்து பழங்குடியினர் வெட்கம், இனவெறியர்கள் என கோஷம் எழுப்பிய பிறகே விஷயம் தெரிந்தது. நடப்பதை அறிய வெளியே வந்த பிரதமர் கிலார்ட், அபாட்டை தாக்க முயன்றனர். அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிரதமர் தாக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவித்தன.
ஆனால் வெளியே சத்தம் கேட்டதும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வீரர்கள் குவிக்கப்பட்டதாகவும், கிலார்ட், அபாட் இருவரும் பாதுகாவலர்களால் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டு காரில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.
கூட்டத்தில் இருந்து மீட்கப்படும்போஸது ஒரு காலணியை பிரதமர் கிலார்ட் தவற விட்டார். காரில் ஏறும் வரை பலர் அவரை துரத்தி சென்று கோஷமிட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பழங்குடியின மக்களின் நில உரிமைக்கு 1972ல் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. எனினும் பல்வேறு கோரிக்கைகளுக்காக அவர்கள் போராடி வருகின்றனர். இதனால் அரசு & பழங்குடியினர் இடையே பிரச்னை நீடிக்கிறது. இந்நிலையில் மற்ற அவுஸ்திரேலியர்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பழங்குடி மக்களுக்கு கிடைத்தாகி விட்டது.
எனவே அவர்களது பழைய சின்னங்கள், கட்டிடங்களை அகற்றி விடலாம் என சில தினங்கள் முன் எதிர்க்கட்சி தலைவர் அபாட் பேசினார். அதுவே பழங்குடி மக்களின் திடீர் முற்றுகைக்கு காரணம். 200க்கு மேற்பட்ட மக்களின் முற்றுகையில் சிக்கிய பிரதமரை பாதுகாவலர்கள் மீட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



