கனேடிய பாராளுமன்றில் சிறீலங்காவின் ஆணைக்குழு அறிக்கை தொடர்பான மாநாடு ஆரம்பம்

கனடியப் பாராளுமன்றத்தில் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறும் சிறீலங்காவின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்து விட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவென ரொறன்ரோவிலிருந்து தமிழ்ப்பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் பேராளர்கள் பேருந்தை ஒழுங்கு செய்துள்ளனர். அத்தோடு இணையத்தளமூடாகவும் மாநாட்டு நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளன.

இம்மாநாட்டில் 30க்கும் மேற்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதுடன், அமைச்சர்கள், மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகள், மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் தங்களின் கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர்.

சிறீலங்காவால் மிக அண்மையில் வெளியிடப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கை, தமிழர்களின் பிரச்சினைகள் குறித்த எந்தவொரு ஆக்கபூர்வமான தீர்வையும் முன்வைக்கவில்லையென்பதையும், கனடாவின் காத்திரமான பங்கை ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் எட்டவுமே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அண்மையில் கனடாவிற்கு வருகை தந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கனடிய மனித உரிமை மையம் சந்தித்து சமகால நிலவரங்கள் மற்றும் பேச்சுவார்த்தை முன்னேற்றங்கள் தொடர்பான நேரடித் தகவல்களை அவர்களிடமிருந்து பெற்றிருந்தது.

 

Comments are closed.