ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் தமிழ் நாடு தென் மாவட்டங்களுக்கு அணைகட்டி நீர் கொடுத்த கேணல் ஜான் பென்னிகுயிக் (Col.John Pennycuick) தமிழர் வாழ்வில் அழியா இடம் பெற்றுள்ளார்.
இவர் 14 ஜனவரி 1841ல் பிறந்து 9 மார்சு 1911ல் காலமானர். அவர் மும்பாய் நகருக்குச் சிறிய தூரத்தில் உள்ள பூனே நகரில் பிறிகேடியர் ஜெனரல் ஜான் பென்னிகுயிக் சாறா இணையருக்கு மகனாய் பிறந்தார்.
தந்தை இந்தியர்களுக்கு எதிராகப் போராடி சில்லியன்வாலா போhக் களத்தில் சாவடைந்தார். மகன் இங்கிலாந்தில் பொறியியல் கல்வி கற்று இராணுவப் பொறியியலாளராக பதவியேற்றார். சென்னை இராணுவப் பொறியியல் அணியில் 1858ம் ஆண்டில் நியமனம் பெற்றார்.
1867 -1868 காலத்தில் அவர் அன்று அபிசீனியா என்று அழைக்கப்பட்ட இன்றைய எதியோப்பியாவில் பணியாற்றினார். பணியை மெச்சும் தங்கப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்தியா திரும்பிய அவர் மதராஸ் (Madras) என்றழைக்கப்பட்ட சென்னை நிர்வாக பகுதியின் பொதுப் பணித் திணைக்களத்தில் (Public Works Department) ஜனவரி 1896 வரை பொறியியலாளராகப் பணியாற்றினார்.
இந்தக் காலப்பகுதியில் அவர் பல நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றினார். அவற்றுள் முதன்மையானது முல்லைப் பெரியாறு அணைத்திட்டம். இந்தப் திட்டத்தைப் செயற்படுத்தும் போது அவர் முதன்மைப் பொறியியலாளராகப் பதவி வகித்தார்.
மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் சேர்ந்த பெரியாற்றை அவர் கிழக்கு நோக்கித் திருப்பிவிடத் தீர்மானித்தார். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் நீர் வசதி பெறும் வாய்ப்பு இதனால் ஏற்பட்டது.
மேற்கூறிய ஜந்து மாவட்டங்களின் பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வைகை நதியின் போதாத நீரையும் வான் மழையையும் நம்பியிருந்தன. பெரும்பாலன மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தனர்.
அவர் முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்தைத் தொடங்கிய போது பெருமழை, காட்டு விலங்குகள், விஷப் பூச்சிகள் என்பன தடங்கலாக இருந்தன.
ஆரம்ப கட்டத்தில் அவர் கட்டிய அணையின் அடிப் பாகம் காட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
பணியை மீண்டும் தொடங்கி முடிப்பதற்கு மேலதிக நிதியை வழங்குவதற்கு அரசு மறுத்து விட்டது. கட்டுமானத்தை அந்தளவோடு நிறுத்த விரும்பாத பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று நிதி திரட்டினார்.
தனது பூர்வீகச் சொத்துக்களை விற்றுப் பணமாக்கினார். இன்னுமொரு தொகையை வட்டிக் கடனாகப் பெற்றார். இந்தியா திரும்பி அணை கட்டும் பணியை மீண்டும் தொடங்கினார்.
1895ம் ஆண்டு முல்லை பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டு அரசினால் திறந்து வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 2.23 இலட்சம் ஏக்கர் நிலம் அணை மூலம் நீர் வளம் பெற்றது. இன்று அதிலும் பன்மடங்கு ஏக்கர் நிலம் நீரைப் பெறுகிறது.
முல்லைப் பெரியாறு அணை ஒரு “பொறியியல் அதிசயம் “(Engneering Marvel)என்று அழைக்கப்படுகிறது. 1886 – 1895 காலப்பகுதியில் மிகவும் முற்போக்கான பொறியியல் முறையில் இந்த அனை கட்டப்பட்டது.
சுண்ணாம்பு சுர்க்கி கலைவையால் (Lime Surkhi Mortar) கருங்கல்லில் கட்டப்பட்ட இந்த அணை நீர் அழுத்தம், அலை அழுத்தம், நில அதிர்வு விசை என்பனவற்றைத் தனது பளுவினால் தாங்கும் வலுக் கொண்டது.
இது புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்பட்ட அணை, இந்த ரக அணைகள் அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இந்த ரகம் மிகவும் உறுதியானது. என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.
மேலும் முல்லைப் பெரியாறு அணை மத்திய நீர் ஆணையத் தலைவரின் பரிந்துரைக்கு அமைவாக 1980 – 1994 காலத்தில் வலுப்படுத்தப் பட்டது. இன்று கேரள அரசு அணையின் உறுதித் தன்மையைக் கேள்விக் குறியாக்கிப் புதிய அணை கட்டத் தீர்மானித்துள்ளது.
இதற்கு தமிழகத்தில் பரவலான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான சுடு போர் போல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மத்திய அரசு ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்கிறது.
தமிழ் நாட்டின் நீர்வளம் கேரளத்தின் நீர் வளத்திலும் பார்க்க குறைவானது. தமிழ் நாட்டின் நீர் வளம் சுமார் 1,350டி எம்சியாகவும் கேரளத்தின் நீர் வளம் சுமார் 2.500 டிஎம்சியாகவும் இருக்கிறது.
கேரளத்தின் நீர் வளத்தில் சுமார் 1300 டிஎம்சி ஒவ்வொரு ஆண்டும் அரபிக் கடலில் வீழ்ந்து வீணாகிறது. கேரளத்தில் விவசாய நிலங்கள் மிகக் குறைவு. கேரளத்திற்கு தேவையான நீர் 850 டிஎம்சி மாத்திரமே.
தானும் பயன்படுத்தாமல் பிறருக்கும் வழங்க மனமில்லாமல் கேரளம் படுமோசமான நிலைப்பாட்டை எடுக்கிறது. அணைக்கு கேரளத்தின் மூலம் ஆபத்து என்று தமிழ் நாட்டு விவசாயிகள் கொதித்து எழுந்துள்ளனர்.
தமிழ் நாட்டின் ஜந்து மாவட்டங்களுக்கும் முழுத் தமிழ்நாட்டிற்கும் பேருதவி புரிந்த ஜான் பென்னிகுயிக் பற்றிய நினைவுகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கனவே தமிழ் நாடு அரசு அவருடைய வெண்கலச் சிலையை நிறுவியுள்ளது.
பொதுப் பணித்துறை நிர்வாக அலுவலகங்களில் அவருடைய மார்பு அளவு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவருடைய பிறந்த நாள் பொங்கல் நாளாக இருப்பதால் பென்னிகுயிக் படத்திற்கு படையல் வைக்கப்பட்டு ஆராதனை நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
தேனி மாவட்டத்தில் நெடுகாலமாக பென்னிகுயிக் என்று பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் இருக்கிறது. தேனியில் அவருக்கு கோயில் எழுப்பப்பட்டு பூசைகள் நடக்கின்றன. விவசாயிகள் கடவுளின் அவதாரம் என்று அவர் பற்றி நம்புகின்றனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை,சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டக் கிராமங்களில் பென்னிகுயிக்கின் சிறு கோவில்கள் காணப்படுகின்றன. ஒரு குரோர் செலவில் அவருக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா அரசு தீர்மானித்துள்ளது.
மிக அண்மையில் இந்தப் பெருமகனின் பூட்டன் வழக்கறிஞர் ஸ்ருவட் சாம்சன் (Stuart Sampson) இங்கிலாந்தில் இருந்து தேனி மாவட்டத்திற்குச் சுற்றுலா வந்தார்.
நன்றிப் பெருக்குடன் ஒரு தேனி விவசாயி அவருடைய பாதத்தை முத்தமிட்டார். மேற்கூறிய ஜந்து மாவட்டங்களின் மக்கள் வீடுகளில் கடவுள் படங்களோடு பென்னிகுயிக் படங்களும் வைக்கப்பட்டுள்ளன.
வறட்சி மாவட்டங்களை செழித்தோங்கச் செய்த பென்னிகுயிக் மக்கள் வாழ்வில் சமுதாய, பொருளாதார மாற்றங்களை நிரந்தரமாக எற்படுத்தினார். அவரைக் கடவுளாகக் கருதுவதில் தவறில்லை.



