ஆசிரியர் தலையங்கம் (21/11/2011)
www.eelampress.com
போரில் தோல்வி அடைந்த நாட்டை ஆழ்வதற்கு வெற்றி பெற்ற நாடு தனது ஆளுநரை அனுப்புவது உலக வழமை. அந்த ஆளுநர் ஆண்டான் அடிமை மரபுக்கு அமைவாக ஆட்சி செய்வதும் அதே வழமையின் அங்கம்.
கொழும்பு அரசு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குச் சிங்கள ஆளுநர்களை அனுப்பியுள்ளது. இவர்கள் பசுத் தோல் போர்த்திய புலியைப் போல் இராணுவச் சீருடையை வீட்டில் வைத்து விட்டுத் தூய வெள்ளை நிற அடையணிந்து சிவில் அதிகாரி வேடம் தரித்துள்ளனர்.
ஆனால் அவர்களுடைய இராணுவ மிடுக்கும் அடாவடித்தனமும் அப்படியே இருக்கின்றன. சிவில் நிர்வாகத்தில் தலையிடுவதோடு தமிழர் நலனுக்குப் புறம்பான நடவடிக்கைகளிலும் இந்த ஆளுநர்கள் ஈடுபடுகின்றனர்.
மாட்டைக் கடித்து, ஆட்டைக் கடித்து, மனிதனையும் கடிப்பது போல் யாழ் ஆளுநர் சந்திரசிறி தமிழ் மக்களின் பெரும் சொத்தான கல்வியையும் முடக்கத் தொடங்கியுள்ளார்.
யாழ்ப்பாணத் தமிழர்கள் கல்விக்குப் பெயர் பெற்றவர்கள். அந்த வறண்ட மண்ணில் விவசாயம் செய்வது கடினம். கல்வி மாத்திரம் சிறந்த விளைச்சலைத் தரும் என்று இந்த மண்ணின் மக்கள் காலம் காலமாக உணர்ந்துள்ளனர்.
வட மாகாண கல்வி அதிகாரிகள் சுதந்திரமாகச் செயற்பட ஆளுநர் சந்திரசிறி அனுமதிப்பதில்லை. முட்டுக் கட்டைகளை போடுவதிலும் முன்னுக்குப் பின்னுக்குப் முரண்பாடன கட்டளைகள் போடுவதிலும் அவர் முனைப்பாக ஈடுபடுகிறார்.
ஜனாதிபதியின் ஏக பிரதிநிதியாகச் செயற்படும் ஆளுநர் கல்வி வளர்ச்சியை மழுங்கடிப்பதில் குறியாக இருக்கிறார். சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த காலத்தில் தமிழ் மாணவர்கள் பல்கலைக் கழகங்களில் நுளைவதைத் தடுக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்.
இவர் கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட (Standari Zation) தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போர் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தமிழர் கல்வியில் கைவைத்த சிறிமாவோ தமிழரைப் போராட வைத்தார்.
இப்போது மீண்டும் அதையொத்த நிலவரம் தோன்றியுள்ளது. அகில இலங்கை ரீதியில் யாழ் மாணவன் ஒருவன் முதலாம் இடத்தில் சித்தி பெற்றதால் சிங்கள ஆட்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழர்களின் கல்விச் செல்வத்தைப் பறிக்கும் நடைமுறை முனைப்புப் பெறத் தொடங்கி விட்டது. யாழ் மாகாணக் கல்வி வளர்ச்சிக்கு கொழும்பு அரசு ஒரு விழுக்காடு நிதியை மாத்திரம் ஒதுக்கியுள்ளது.
இந்த அற்ப தொகை கல்வி வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதற்குப் போதுமானதல்ல. புலம் பெயர் நாடுகளின் யாழ் கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் உதவி வழங்க முன்வந்துள்ளன.
ஏற்கனவே கனடா ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் சங்கம் நிதி மற்றும் கல்வி உபகரண உதவிகளை வழங்கியுள்ளது. சுண்டிக்குளி பழைய மாணவிகள் சங்கமும் இதுபோன்ற உதவிகளை அனுப்பியுள்ளது.
யாழ்ப்பாணத்திலும் உதவிகள் திரட்டிப் பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் வழங்கப்படுகின்றன. நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் இந்த வகை சுய உதவி திட்டங்களை நிறுத்தும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநர் சந்திரசிறியின் இந்த உத்தரவு கடும் அதிர்ச்சியைக் கல்வி வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற எஸ்.எம் கிறிஷ்ணா யாழ் மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படப் போவதாகச் சொன்னார்.
மறுமலர்ச்சிக்குப் பதிலாகக் கடும் வறட்சியும் அறியாமையும் கல்வித் தரத்தில் வீழ்ச்சியும் ஏற்பட வாய்ப்பு நிறைய இருக்கிறது. இந்தச் சூழலில் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் யாழ் செல்லவிருக்கிறார்.
சென்னையில் வழங்கிய இந்த வாரச் செவ்வியில் டாக்டர் அப்துல் கலாம் “இலங்கையில் நான் தமிழ், சிங்களம், ஆங்கிலம் எனும் மும்மொழி கல்வித் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளேன்” என்று கூறினார்.
சூது வாதற்ற பிரம்மஞானியான கலாமுக்கு சிங்கள அரசியல்வாதிகள் பற்றித் தெரியாது போலும். தமிழர் கல்வி அழியும் நிலையில் இருக்கும் நிலையில் எப்படித்தான் அவரால் மும்மொழிக் கல்வித்திட்டத்தை தொடங்கி வைக்க முடியும்.



